Please enable javascript.பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன் உருக்கம் - Voluntarily giving up from politics: Tamilaruvi Maniyan announces - Samayam Tamil

பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன் உருக்கம்

TNN | 26 May 2016, 6:27 pm
Subscribe

அரசியல் வாழ்வை விட்டு விலகுவதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

voluntarily giving up from politics tamilaruvi maniyan announces
பொது வாழ்வை விட்டுப் போகிறேன்: தமிழருவி மணியன் உருக்கம்
அரசியல் வாழ்வை விட்டு விலகுவதாக, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும்.

உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் அதிகாரமும் வந்து சேரும் என்பதைப் பூரணமாக அறிந்த பின்பும், நேர்மையுடன் நடப்பதன் மூலம் எந்த மேலான மாற்றத்தையும் பொது வாழ்வில் கொண்டு சேர்க்க இயலாது என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அரசியல் உலகத்தில் நீடிப்பது அர்த்தமற்றது.

காட்டுக் குயில் பாட்டைக் காது கொடுத்துக் கேட்பதற்குக் கானகத்தில் யாரும் இல்லாத போது, தன் தொண்டை வறண்டு புண்ணாகும் வரை அது எதற்காகப் பாடவேண்டும்? குத்துப்பாட்டில் குதூகலிக்கும் பாமரர்கள் பார்வையாளர்களாகக் கூடியிருக்கும் அரங்கில் அமர்ந்து, சுத்த தன்யாசியில் ஆன்மாவே உருகும்படி ஆலாபனை செய்தாலும் அந்த சங்கீத உபாசகனுக்கு யார் வந்து மரியாதை செய்து மாலையிடப் போகிறார்கள்?

மதுவைக் குடித்து மயங்கிக் கிடக்கும் மனிதர் கூட்டத்தில் காந்தியக் கொள்கைகளுக்குப் பாராட்டு விழா நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால் அவனைவிட ஏமாளி எவன் இருக்க முடியும்? வாழ்க்கைக்கு அவசியப்படும் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் சோம்பேறி மடத்தில் உழைப்பின் பெருமையையும், வியர்வையின் உயர்வையும் உபதேசிப்பவனை நெஞ்சில் நிறுத்தி நேசிப்பதற்கு யார்தான் முன்வருவார்கள்?

கல்லில் விதைத்துக் கனியைப் புசிக்கக் காத்திருப்பதும், பாலையில் பயிரிட்டுப் பசியாற்றிக் கொள்ள முடிவெடுப்பதும், தமிழகத்து வாக்காளர்களிடம் லட்சியம் பேசி வெற்றி பெறமுடியும் என்று உறுதி கொள்வதும் பைத்தியக்காரத்தனம் என்று புரிந்து விட்ட நிலையில் என் 48 ஆண்டு காலப் பொதுவாழ்விலிருந்து முற்றாக விலகிக் கொள்கிறேன்.

மாநிலக் கல்லூரியில் மாணவனாகப் பயின்றபோது பெருந்தலைவர் காமராஜரின் காலடியில் என் அரசியல் வாழ்வை ஆரம்பித்தேன். காமராஜரால் ‘தமிழருவி’ என்று அழைக்கப்பட்டேன். இயன்ற வரை என் நெடிய அரசியல் வாழ்வில் கறையற்று, களங்கமற்று நேர்கோட்டில் நான் நடந்திருக்கிறேன்.

நேர்மைக்குப் புறம்பாகவும், அறத்துக்கு மாறாகவும் ஒற்றைக் காசைக் கூட நான் யாரிடத்தும் கை நீட்டிப் பெற்றதில்லை என்ற பெருமிதத்துடன் என் பொதுவாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன். சொந்த முகவரியும் இல்லாமல், எந்த தனித்துவமும் இல்லாமல் இந்த மண்ணில் வாழும் எத்தனையோ சாதாரண மனிதர்களுள் ஒருவனாக என் எஞ்சிய வாழ்வை இனி நான் அமைத்துக் கொள்வேன்.

காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால், நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்த படி இந்த முடிவை நான் மேற்கொண்டிருக்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ, இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன். காந்திய மக்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை அதனுடைய நிர்வாகிகள் கூடி நிர்ணயம் செய்வார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்